இலங்கைப் பெருங்கடலை மாசுபடுத்திய 26 கப்பல்கள்..!!

கடந்த ஒரு வருடத்தில் 26 கப்பல்கள் இலங்கைப் பெருங்கடலை மாசுபடுத்தியுள்ளதாகக் கடல்சார் சுற்றாடல் பாதுகாப்பு அதிகாரசபை தெரிவித்துள்ளது.

அண்மைக்கால வரலாற்றில், எக்ஸ்பிரஸ் பேர்ள் மற்றும் நியூ டயமண்ட் ஆகிய கப்பல்களால் இலங்கைப் பெருங்கடலில் கடுமையான சேதங்கள் ஏற்பட்டன.

நியூ டயமண்ட் கப்பல் 2020 செப்டம்பரில் இலங்கையின் கிழக்குக் கடற்கரையிலிருந்து 38 கடல் மைல் தொலைவில் தீ விபத்துக்குள்ளாகி மூழ்கியது.

மேலும், 2021 மே மாதம் சிங்கப்பூரில் பதிவு செய்யப்பட்ட எக்ஸ்பிரஸ் பேர்ள் என்ற கப்பல் கொழும்பு துறைமுகத்திற்கு அருகில் உள்ள கடலில் தீப்பிடித்து மூழ்கியது.

இந்தக் கப்பல் விபத்துக்கள் காரணமாக இலங்கையின் கடல் சுற்றுச்சூழலுக்குக் கடுமையான மற்றும் நீண்டகாலச் சேதம் ஏற்பட்டுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இவ்வாறான கடல் சூழல் மாசுபாடு விபத்துக்கள் இடம்பெற்ற சூழலில் பிரான்ஸ் அரசாங்கத்தின் உதவியுடன் இலங்கை கடற்பரப்பில் செயற்கைக்கோள் தொழில்நுட்பத்தின் அடிப்படையில் எரிபொருள் கசிவுகளை ஆராய கடல்சார் சுற்றாடல் பாதுகாப்பு அதிகாரசபை மற்றும் பிரான்ஸ் நிறுவனத்தினால் முன்னோடித் திட்டம் ஒன்று நடத்தப்பட்டது.

அங்கு பெறப்பட்ட தரவுகளின் அடிப்படையில் கடந்த ஓராண்டில் இலங்கைப் பெருங்கடலுக்குள் நுழைந்த 26 கப்பல்கள் இலங்கைப் பெருங்கடலை மாசுபடுத்தியுள்ளதாகத் தெரியவந்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *