புதுமை விரும்பி.. கார் பிரியர் – ரத்தன் டாடா பற்றி பலரும் அறியாத 15 சுவாரஸ்ய தகவல்கள்..!!

இந்திய தொழில்துறையில் மிகப்பெரும் சாம்ராஜ்யத்தை கட்டியெழுப்பிய தொழிலதிபர் ரத்தன் டாடாவின் மறைவு பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. புதுமை விரும்பியாகவும், கொடை வள்ளலாகவும் திகழ்ந்த ரத்தன் டாடா, இளைஞர்களுக்கு வழிகாட்டி, முதலாளிகள் பின்பற்ற வேண்டிய அடையாளம். ரத்தன் டாடா பற்றிய சில சுவாரஸ்யமான தகவல்களை இங்கே பார்க்கலாம்.

இந்தியாவின் முன்னணி தொழிலதிபர் ரத்தன் டாடா, வயது முதிர்வால் ஏற்பட்ட உடல்நலக்குறைவால் கடந்த 7ஆம் தேதி மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அவரது ரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைக்க தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் சிகிச்சை பலனின்றி ரத்தன் டாடா நேற்று காலமானார் ரத்தன் டாடா.

ரத்தன் டாடா, வியந்து போற்றப்பட பல காரணங்கள் உள்ளன.

வெற்றிகரமான நிர்வாகி: ரத்தன் டாடாவின் தலைமையின் கீழ், டாடா குழுமத்தின் வருவாய் 40 மடங்கு உயர்ந்தது. லாபம் 50 மடங்கு உயர்ந்தது. டெட்லி, ஜாகுவார் லேண்ட் ரோவர் மற்றும் கோரஸ் போன்ற பிராண்டுகளை வாங்கி, டாடாவை உலகளாவிய தொழில் நிறுவனமாக மாற்றுவதில் அவர் முக்கிய பங்கு வகித்தார்.

கொடை வள்ளல்: ரத்தன் டாடா தனது சேவைகளுக்காக பெயர் பெற்றவர். டாடா குழுமத்தின் நிகர வருமானத்தில் 60% க்கும் அதிகமானவை பல்வேறு அறக்கட்டளைகளுக்கு நன்கொடையாக வழங்கப்படுகின்றன. கிராமப்புற மேம்பாடு, சுகாதாரம் மற்றும் கல்விக்கு ஏராளமான உதவிகளைச் செய்து வந்தவர் ரத்தன் டாடா.

கார்கள் மீதான பேரார்வம்: ரத்தன் டாடா கார்கள் மீது மிகுந்த ஆர்வம் கொண்டவர். ஆட்டோமொபைல் துறையின் முக்கிய சக்தியாக திகழ்ந்த அவர், உலகின் மிக விலை மலிவான காரான டாடா நானோவை அறிமுகப்படுத்தி நடுத்தர மக்களின் கார் கனவை நிறைவேற்றியவர்.

பைலட் ரத்தன் டாடா: ரத்தன் டாடா, பெங்களூர் விமான கண்காட்சியில் சுகோய் 35 ஐ ஓட்டிய உரிமம் பெற்ற பைலட் ஆவார். மேலும் மற்ற விமானிகளுடன் சேர்ந்து தனது சொந்த கமர்ஷியல் ஜெட் விமானங்களையும் ஓட்டியுள்ளார்.

உயரத்திலும் எளிமை: ஒரு தொழிலதிபராக உயர்ந்த நிலையில் இருந்தபோதும், ரத்தன் டாடா எளிமையான வாழ்க்கையையே நடத்தி வந்தார். எளிதில் அணுகக்கூடியவராக இருந்தார். சமூக ஊடகங்கள் மூலம் தன்னை அணுகும் நபர்களுக்கு அவர் அடிக்கடி தனிப்பட்ட முறையில் பதிலளிப்பதையும் வழக்கமாகக் கொண்டிருந்தார்.

விருதுகளும் கௌரவங்களும்: 2008 ஆம் ஆண்டில் இந்தியாவின் இரண்டாவது மிக உயர்ந்த விருதான பத்ம விபூஷன் மற்றும் 2000 ஆம் ஆண்டில் பத்ம பூஷன் உட்பட பல விருதுகளை ரத்தன் டாடா பெற்றுள்ளார்.

திருமணம் செய்துகொள்ளவில்லை: ரத்தன் டாடா திருமணம் செய்து கொள்ளவே இல்லை. அவர் நான்கு முறை, திருமணம் செய்து கொள்வதை நெருங்கிச் சென்றாலும், அப்போதைய சூழ்நிலைகள் காரணமாக திருமணம் நடக்கவில்லை. பின்னர் திருமணமே செய்து கொள்ள வேண்டாம் என்ற முடிவை உறுதியாக எடுத்தார்.

டெக் முதலீடுகளில் ஆர்வம்: தொழில்நுட்ப ஸ்டார்ட்-அப்களை ஆதரிப்பதில் ரத்தன் டாடா தீவிர ஆர்வம் காட்டினார். அவர் Snapdeal, Ola, Paytm போன்ற பல முக்கிய நிறுவனங்களில் முதலீடு செய்துள்ளார், மேலும் சீன செல்போன் நிறுவனமான Xiaomi-ல் கூட முதலீடு செய்தார்.

மும்பை தாக்குதலின்போது: 2008 மும்பை தாஜ் ஹோட்டல் பயங்கரவாத தாக்குதலின் போது,​​பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் அவர்களது குடும்பங்களின் மறுவாழ்வுக்காக ரத்தன் டாடா மகத்தான பணிகளைச் செய்தார். பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்து, அவர்களுக்கு வேண்டியது கிடைப்பதை உறுதி செய்தார்.

புதுமை விரும்பி: டாடா குழுமத்திற்குள் புது முயற்சிகளை எப்போதும் ஊக்குவித்தார் ரத்தன் டாடா. அவரது இந்தப் பண்பே, இந்திய வாகனத் துறையில் குறிப்பிடத்தக்க மைல்கற்களான டாடா நானோவை உருவாக்கவும், முதன் முதலில் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட டாடா இண்டிகாவை அறிமுகப்படுத்தவும் வழிவகுத்தது.

தரத்தில் சமரசமில்லை: கார்ப்பரேட் போட்டியின் தீவிரம் மற்றும் மார்க்கெட் ஏற்ற இறக்கங்கள், வணிக தடைகளை எதிர்கொண்ட போதிலும், ரத்தன் டாடா, டாடா குழுமத் தயாரிப்புகளின் தரத்தில் என்றும் சமரசம் கொள்ளவில்லை.

வழிகாட்டி: ஓய்வுக்குப் பிறகு, ரத்தன் டாடா இளம் தொழில்முனைவோருக்கு வழிகாட்டுவதில் கவனம் செலுத்தினார். உலகெங்கிலும் சென்று, இளம் தொழிலதிபர்கள் பங்கேற்கும் நிகழ்வுகளில் அடிக்கடி பேசினார். வணிகம் மற்றும் தலைமைத்துவம் குறித்த தனது அனுபவங்களையும் பகிர்ந்து கொண்டார்.

ரத்தன் டாடா அறக்கட்டளைகள்: CSR நிதி வழங்குவதற்கு அப்பால், அவரது தலைமையின் கீழ் உள்ள டாடா அறக்கட்டளைகள், சமூகத்தின் நலனுக்காக இந்தியா முழுவதும் பல திட்டங்களை செயல்படுத்தி உள்ளன.

பெட் லவ்வர்: ரத்தன் டாடா, நாய்கள் மீது மிகுந்த அன்பு கொண்டவர். விலங்கு நல முயற்சிகளில் தீவிரமாக ஈடுபட்டவர். டாடா குழுமத்தின் மும்பை தலைமையகமான பாம்பே ஹவுஸ் கட்டிடத்தின் ஒரு பகுதியில் தெரு நாய்களுக்கான வசிப்பிடம் உள்ளது.

இளைஞர்கள் மீதான நம்பிக்கை கொண்டவர்: தேசத்தை மாற்றுவதில் இந்திய இளைஞர்களின் திறனை வியந்து போற்றியவர் ரத்தன் டாடா. பேசுவதோடு நிற்காமல் கல்வி மற்றும் திறன் மேம்பாட்டு திட்டங்களுக்காக ஏராளமான உதவிகளைச் செய்தார். தனது தனி உதவியாளராக, சேவை மனப்பான்மை கொண்ட இளைஞராண சாந்தனு நாயுடுவை கடந்த சில ஆண்டுகளாக அருகில் வைத்திருந்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *