மருந்துகள் ஒழுங்குப்படுத்தல் அதிகார சபையின் 11 இலட்சம் தரவுகள் மாயம்.
தேசிய மருந்துகள் ஒழுங்குப்படுத்தல் ஆணைக்குழுவின் தரவு களஞ்சியத்திலிருந்து சுமார் 11 இலட்சம் தரவுகள் காணாமல் போயுள்ளமை குறித்து, குற்றப் புலனாய்வு திணைக்களம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.
இந்த தரவுகள் காணாமல் போன சம்பவம் குறித்து, தேசிய மருந்தாக்கல் ஒழுங்குப்படுத்தல் அதிகார சபையும் விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.
இது திட்டமிட்டு செய்யப்பட்ட செயற்பாடா என்ற கோணத்தில் விசாரணைகள் நடத்தப்பட்டு வருகின்றன.
இணையவழியாக களஞ்சியப்படுத்தப்பட்டிருந்த பெருமளவான தரவுகள், இவ்வாறு காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அதிகார சபை வசம் மேலதிக தரவுகள் இல்லாமையினால், இது பாரிய பிரச்சினையாகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தனியார் நிறுவனமொன்றுடன் 2018ம் ஆண்டு முதல் உடன்படிக்கை மூலம் இந்த தரவுகள் களஞ்சியப்படுத்தப்பட்டிருந்ததாகவும், இலங்கை தகவல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனமும் இதனுடன் தொடர்புப்பட்டிருந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இந்த சம்பவம் காரணமாக நாட்டில் மருந்து தட்டுப்பாடு ஏற்படாது எனவும், புதிய விண்ணப்பங்களுக்கு அமைய அனுமதி வழங்கப்படும் எனவும் தேசிய ஔடதங்கள் ஒழுங்குப்படுத்தல் அதிகார சபை தெரிவிக்கின்றது.