-ஜனாதிபதி கூட்டத்தில் வெளியான புதிய தகவல்
கொரோனா தடுப்பூசியின் மூன்றாவது மருந்தளவான (DOSE) பூஸ்ட்டர் மருந்தளவை வழங்க இதுவரை உலக சுகாதார ஸ்தாபனம் அங்கீகாரம் வழங்கவில்லை என கொவிட்-19 தடுப்புக்கான ஜனாதிபதி செயலணியின் உறுப்பினர் விசேட வைத்தியர் டொக்டர் பிரசன்ன குணசேன தெரிவிக்கின்றார்.
ஜனாதிபதியுடன் நேற்றைய தினம் (27) இடம்பெற்ற சந்திப்பில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
தற்போது தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கைகளில் முதலாவது மருந்தளவை பெரும்பாலும் 100 வீதமாக செலுத்தியுள்ளதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
இரண்டாவது மருந்தளவை 56 வீதமானோருக்கு செலுத்தியுள்ளதாகவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த நிலையில், கொவிட் தடுப்பூசியின் இரண்டாவது மருந்தளவை செலுத்தி முழுமையாக நிறைவு செய்ததன் பின்னர், அடுத்தக்கட்ட தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கைகளில் 30 வயதுக்கு குறைவானோருக்கா முன்னுரிமை வழங்கப்பட வேண்டும்? அல்லது 60 வயதுக்கு மேற்பட்டோருக்கு பூஸ்ட்டராக மூன்றாவது தடுப்பூசியை செலுத்த வேண்டுமா? என ஜனாதிபதி இதன்போது கேள்வி எழுப்பியுள்ளார்.
இதற்கு பதிலளித்த கொவிட்-19 தடுப்புக்கான ஜனாதிபதி செயலணியின் உறுப்பினர் விசேட வைத்தியர் டொக்டர் பிரசன்ன குணசேன, மூன்றாவது தடுப்பூசியாக பூஸ்ட்டரை வழங்க உலக சுகாதார ஸ்தாபனம் இதுவரை அனுமதி வழங்கவில்லை என கூறினார்.
எனினும், சில நாடுகள் மூன்றாவதாக பூஸ்ட்டரை வழங்கி வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
60 வயதுக்கு மேற்பட்டோருக்கு முதலாவது மற்றும் இரண்டாவது தடுப்பூசிகளை மாத்திரமே முழுமையாக செலுத்துமாறு, உலக சுகாதார ஸ்தாபனம் அங்கீகாரம் வழங்கியுள்ளதாகவும் கொவிட்-19 தடுப்புக்கான ஜனாதிபதி செயலணியின் உறுப்பினர் விசேட வைத்தியர் டொக்டர் பிரசன்ன குணசேன தெரிவித்துள்ளார்.