நாட்டில் 12 – 18 வயதுக்கு இடைப்பட்ட மாணவர்களுக்கு கொவிட் தடுப்பூசி செலுத்தும் பணிகளை உடனடியாக ஆரம்பிப்பது தொடர்பில் அவதானம் செலுத்தி வருவதாக சுகாதார அமைச்சர் கலாநிதி கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.
கொவிட் பரவல் காரணமாக சுமார் ஒன்றரை வருட காலம் பாடசாலைகளை மூடவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
எனவே, முடிந்த வரை விரைவில் பாடசாலைகளை ஆரம்பிப்பதற்காக மாணவர்களுக்கு தடுப்பூசி வழங்க ஆரம்பிக்க வேண்டும் என அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
தொலைக்காணொளி தொழில்நுட்பம் ஊடாக இன்று இடம்பெற்ற கலந்துரையாடல் ஒன்றில் கலந்துக்கொண்ட போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
உலக சுகாதார ஸ்தாபனம் உள்ளிட்ட சில சர்வதேச ஸ்தாபனங்கள் சிறுவர்களுக்கு தடுப்பூசி செலுத்துவது தொடர்பில் பரிந்துரைகள் சிலவற்றை முன்வைத்துள்ளன.
சிறுவர்களுக்கான தடுப்பூசி செலுத்தும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டதன் பின்னர் 7 முதல் 13ஆம் தரம் வரையிலான மாணவர்களுக்கு முதலில் தடுப்பூசி வழங்க முடியும் என அமைச்சர் இதன்போது தெரிவித்தார்.
தற்போது ஆசிரியர்கள் மற்றும் கல்விசாரா ஊழியர்களுக்கு பூரணமாக தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ள நிலையில், பாடசாலை மாணவர்களுக்கும் பூரணமாக தடுப்பூசி செலுத்தி முடிக்கப்பட்டதன் பின்னர் பாடசாலைகளை மீள ஆரம்பிக்க முடியும் என அமைச்சர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
இந்த தடுப்பூசி செலுத்தும் பணிகளின் கீழ் சுமார் 20 இலட்சம் மாணவர்களுக்கு தடுப்பூசி செலுத்தக்கூடிய இயலுமை காணப்படுவதாக அவர் மேலும் தெரிவித்தார்.
இதேவேளை, 20 – 29 வயதுக்கு இடைப்பட்டவர்களில் 34சதவீதமானோருக்கு முதலாம் கொவிட் தடுப்பூசியும் 12சதவீதமானோருக்கு இரண்டாம் தடுப்பூசியும் வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல மேலும் தெரிவித்தார்.