ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ பதவி விலகியதாக சிங்கப்பூர் தூதரகமூடாக சபாநாயகருக்கு கடிதம் கிடைத்துள்ளது. இதனை சபாநாயகர் உத்தியோகபூர்வமாக அறிவித்தால் நாளை என்ன நடக்கப் போகிறது? என அருணா செய்தி இணையதளம் பேராசிரியர் வழக்கறிஞர் பிரதிபா மஹாநாமஹேவாவிடம் கேட்டபோது.
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் இராஜினாமாவால் வெற்றிடமடைந்த ஜனாதிபதி பதவிக்கு அடுத்த ஜனாதிபதியை தெரிவு செய்யும் வரை பிரதமரை பதில் ஜனாதிபதியாக பதவிப் பிரமாணம் செய்ய முடியும் என பேராசிரியர் பிரதிபா மஹாநாமஹேவா சுட்டிக்காட்டியுள்ளார்.
ஆனால் அரசியலமைப்பின் பிரகாரம் ஒரு மாதத்திற்குள் பாராளுமன்றத்தில் நடத்தப்படும் வாக்கெடுப்பின் மூலம் அடுத்த ஜனாதிபதியை தெரிவு செய்ய வேண்டும் எனவும், தேவைப்பட்டால் பதில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவும் போட்டியிட முடியும் எனவும் அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.
பாராளுமன்றத்தில் உள்ள உறுப்பினர்களின் எண்ணிக்கையில் அதிக வாக்குகளைப் பெறுபவர் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்படுவார் என்றும் அவர் கூறினார்.