30 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.இந்நிலையில் 18 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கு தடுப்பூசி ஏற்றுவது குறித்தும் பரிசீலிக்கப்பட்டு வருகின்றது எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
“இதேவேளை 18 வயதுக்குட்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடுவது தொடர்பாக இதுவரை தங்களுக்கு எந்தப் பரிந்துரைகளும் கிடைக்கவில்லை” என திறன்கள் அபிவிருத்தி தொழில்கல்வி ஆராய்ச்சி மற்றும் புத்தாக்க இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமான தெரிவித்தார்.
“எவ்வாறாயினும் சினோர்ஃபாம் மற்றும் ஃபைசர் தடுப்பூசிகள் சில நாடுகளில் பாடசாலை மாணவர்களுக்கு வழக்கப்பட்டு வருவதால் இது தொடர்பாக தற்போது கலந்துரையாடல்கள் நடைபெற்று வருகின்றன” என்று அவர் குறிப்பிட்டார்.
“12 வயது முதல் 18 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கு கொரோனா தடுப்பூசி வழங்குவதற்கான சாத்தியக்கூறுகளை ஆராயுமாறு ஜனாதிபதி அறிவுறுத்தல் வழங்கியுள்ளார்” என்று அவர் மேலும் தெரிவித்தார்.
இதேவேளை 19 வயது தொடக்கம் 29 வயதுக்குட்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி ஏற்றுவது குறித்து அதிகாரிகள் இதுவரை எந்த அறிக்கையும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.