தென் கடற்பரப்பில் 179 கிலோகிராம் ஹெரோயினுடன் சனிக்கிழமை (15) கைது செய்யப்பட்ட 6 பேர் விசாரணைக்காக ஏழு நாட்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
குறித்த குழுவினரை கொழும்பு நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தியதன் பின்னர் பொலிஸார் தடுப்புக்காவல் உத்தரவை பெற்றுக்கொண்டனர்.
தென் கடற்பரப்பில் பல நாள் மீன்பிடிக் கப்பலொன்றில் சுமார் 179 கிலோ 654 கிராம் ஹெரோயின் போதைப்பொருளை சனிக்கிழமை கொண்டு சென்ற போது கைது செய்யப்பட்டுள்ளனர்.
அரச புலனாய்வு சேவையின் தகவலின் அடிப்படையில் இலங்கை கடற்படை மற்றும் இலங்கை கடலோர காவல்படை இணைந்து நடத்திய ஒருங்கிணைந்த நடவடிக்கையில், சுமார் 179 கிலோ 654 கிராம் (பொதிகள் உட்பட) ஹெராயினை ஏற்றிச் சென்ற உள்ளூர் பல நாள் மீன்பிடி இழுவை படகு 132 கடல் மைல் தொலைவில் தடுத்து நிறுத்தப்பட்டது.
இலங்கை கடலோரக் காவல்படையின் ‘சமுத்திரரக்ஷா’ என்ற கப்பலால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
குறித்த போதைப்பொருள் தொகையும் சந்தேகநபர்களும் திங்கட்கிழமை (17) காலி துறைமுகத்திற்கு கொண்டு வரப்பட்டனர்.
இந்த நடவடிக்கையின் போது கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களின் மொத்த மதிப்பு ரூ. 3,593 மில்லியன்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் நகுலுகமுவ, குடாவெல்ல, நெடோல்பிட்டிய மற்றும் திருகோணமலை ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த 25 முதல் 32 வயதுக்குட்பட்டவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பான விசாரணைகள் பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
போதைப்பொருள் கடத்தல் கும்பல் வெளிநாடுகளில் இருந்து கையாளப்படுவதாக முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.
இதன்படி, வெளிநாடுகளில் இருந்து செயற்படும் போதைப்பொருள் கடத்தல்காரரை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.