முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியூதீனின் வீட்டில் 2010ம் ஆண்டு முதல் பணிப் பெண்ணாக கடமையாற்றிய 11 பேரில், மூவர் உயிரிழந்துள்ளமை விசாரணைகளில் உறுதி செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
அத்துடன், ரிஷாட் பதியூதீனின் வீட்டில் பணியாற்றிய சந்தர்ப்பத்தில் தானும் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக இன்றைய தினம் வாக்குமூலம் வழங்கி யுவதியொருவர் தெரிவித்துள்ளார்.
ரிஷாட் பதியூதீனின் வீட்டில் பணியாற்றிய பெண்கள் தொடர்பில், பிரதான பொலிஸ் பரிசோதகர் வருணி போகஹவத்த தலைமையிலான பொலிஸ் குழு விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றது.
ரிஷாட் பதியூதீனின் வீட்டில் பணியாற்றிய மூவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பிரதி பொலிஸ் மாஅதிபர் அஜித் ரோஹண தெரிவிக்கின்றார்.
இந்த நிலையில், எஞ்சிய 8 யுவதிகளிடம் வாக்குமூலம் பெற்றுக்கொண்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இவ்வாறான நிலையில், ரிஷாட் பதியூதீனின் வீட்டில் பணிப் புரிந்த டயகம பகுதியைச் சேர்ந்த யுவதியொருவரை களனி பகுதியில் கண்டுபிடித்துள்ளனர்.
இந்த யுவதியிடம் நடத்தப்பட்ட விசாரணைகளில், குறித்த யுவதியும் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாகியுள்ளமை தெரியவந்துள்ளது.
இதன்படி, விசாரணை நடத்தும் பொலிஸ் குழு, குறித்த யுவதியை, பெளத்தாலோக்க மாவத்தையிலுள்ள ரிஷாட் பதியூதீனின் வீட்டிற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தியுள்ளது.
ரிஷாட் பதியூதீனின் வீட்டின் பல்வேறு இடங்களை, பொலிஸ் குழுவினர் ஆராய்ந்துள்ளனர்