நாட்டில் கொரோனா பரவல் அதிகரித்துள்ள நிலையில், முன்னெச்சரிக்கை ஏற்பாடாக தனது தனிப்பட்ட பாவனைக்காகவே Tocilizumab மருந்தை தன்வசம் வைத்திருந்ததாக பிரபல வானொலி முன்னாள் அறிவிப்பாளரும், முன்னாள் பாராளுமன்ற வேட்பாளர் திரு M.பரணிதரன், தேடல் செய்திப் பிரிவிற்கு தெரிவித்தார்
Tocilizumab மருந்து வகையை தம்வசம் வைத்திருந்த குற்றச்சாட்டின் கீழ், எம்.பரணிதரன் கடந்த ஓரிரு தினங்களுக்கு முன்னர் பொரள்ளை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டிருந்தார்.
இந்த நிலையில், அத தெரண செய்தி சேவையில் ஒளிபரப்பு செய்யப்பட்ட செய்தி தொகுப்பில், பரணிதரனும், இந்த சம்பவத்துடன் தொடர்புப்பட்டுள்ளதாக தகவல் வெளியிடப்பட்டிருந்தது.
தான் வர்ததக ரீதியில் மருந்தை கொள்வனவு செய்து, இலங்கையிலுள்ள எந்தவொரு தரப்பிற்கு, விற்பனை செய்யவில்லை என அவர் கூறுகின்றார்.
எனினும், குறித்த மருந்து தேவைப்படுவோருக்கு, இந்தியாவிலுள்ள தனது தொடர்புகளின் ஊடாக, மருந்தை அவர்களே சென்று கொள்வனவு செய்துக்கொள்வதற்கான ஏற்பாடுகளை தான் செய்துக் கொடுத்ததாகவும் அவர் குறிப்பிடுகின்றார்.
இவ்வாறான நிலையில், தனக்கு மேலதிகமாக 6 மருந்துகளை கொள்வனவு செய்துக்கொள்வதற்கான சந்தர்ப்பம் கிடைத்த நிலையில், தனது சொந்த தேவைக்காக அவற்றை கொள்வனவு செய்து, தனது வீட்டில் வைத்துக்கொண்டதாகவும் அவர் கூறினார்.
தனது வீட்டில் வயோதிபர்களான தனது தந்தை, தனது தாய், தனது மாமனார் மற்றும் தனது மாமியார் வசித்து வருவதாக அவர் தெரிவித்தார்.
தனது வீட்டை சூழவுள்ள அனைத்து வீடுகளிலும், கொவிட் தொற்றாளர்கள் பதிவாகி வருகின்ற நிலையில், தனது உறவினர்களை பாதுகாக்கும் நோக்குடனேயே, தட்டுப்பாடாக காணப்படும் இந்த அத்தியாவசிய மருந்து வகைகளை முன் ஏற்பாடாக வீட்டில் களஞ்சியப்படுத்திக் கொண்டதாகவும் பரணிதரன் கூறுகின்றார்.
தனது வீட்டில் மருந்து களஞ்சியப்படுத்தப்பட்டுள்ளமை தொடர்பிலான தகவல்களை ஏதோ வகையில், அறிந்துக்கொண்ட அதிகாரிகள், தான் குற்றம் இழைத்ததை போன்று தன்னை கைது செய்ததாகவும் அவர் தெரிவித்தார்.
எனினும், தான் பொலிஸாருக்கு முழுமையான வாக்குமூலத்தை வழங்கியுள்ளதாக அவர் குறிப்பிடுகின்றார்.
இலங்கைக்கு மருந்து அனுமதிக்கப்பட்ட விதத்தில் கொண்டு வந்தமைக்கான ஆவணங்களை சமர்ப்பிக்குமாறும், அவ்வாறு ஆவணங்களை சமர்ப்பிக்கும் பட்சத்தில் குறித்த 6 மருந்துகளையும் மீள வழங்குவதாகவும் பொலிஸார், பரணிதரனுக்கு உறுதியளித்துள்ளனர்.
இலங்கைக்கு அனுமதிக்கப்பட்ட விதத்தில் மருந்தை கொண்டு வந்தமைக்கான ஆவணங்களை தான் இன்றைய தினம் (09) பொலிஸாரிடம் கையளித்துள்ளதாக எம்.பரணிதரன் தெரிவித்தார்.
தான் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் மோசடியில் ஈடுபடவில்லை எனவும், இந்த மருந்து தேவைப்படுவோருக்கு, தொடர்ந்தும் அந்த மருந்தை கொள்வனவு செய்துக்கொள்வதற்கான வழிகளை தான் ஏற்படுத்திக் கொடுப்பதாகவும் அவர் கூறுகின்றார்.
அத தெரண தொலைக்காட்சி செய்தி தொகுப்பில் காண்பித்த ஏனைய தரப்பினருக்கும், தனக்கும் இடையில் எவ்வித தொடர்பும் கிடையாது என பிரபல வானொலி முன்னாள் அறிவிப்பாளரும், அரசியல்வாதியுமான M.பரணிதரன் உறுதியாக தேடல் செய்திக்கு தெரிவித்திருந்தார்
இதன்போது குறித்த மருந்துகளை சட்டரீதியாக யாருக்கும் உபயோகித்துக் கொள்ள முடியும் என்றும் அவர் தெரிவித்திருந்தார்