இலங்கை வங்கியின் 82ஆவது ஆண்டு விழாவை முன்னிட்டு புதிதாக நிறுவப்பட்ட ஏற்றுமதி பிரிவு கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்களினால் இன்று (02) அலரி மாளிகையில் வைத்து திறந்துவைக்கப்பட்டது.
இணைய தொழில்நுட்பம் ஊடாக கௌரவ பிரதமர் இவ்விசேட பிரிவை திறந்துவைத்தார். இலங்கை வங்கியின் தலைமை அலுவலகத்தின் வணிக சேவை பிரிவினுள் இந்த விசேட ஏற்றுமதி பிரிவு நிறுவப்பட்டுள்ளது.
மக்கள் வங்கியின் பொது முகாமையாளராக கடமையாற்றும் D.P.K.குணசேகர அவர்கள் இலங்கை வங்கியின் சிரேஷ்ட வங்கி சேவையாளர் என்ற விருதை கௌரவ பிரதமரிடமிருந்து பெற்றுக் கொண்டார்.
இலங்கை வங்கியின் தலைவர் காஞ்சன ரத்வத்த அவர்கள்
அரச நிதிக் கொள்கைக்கு அமைய அந்தந்த அரசாங்கத்தின் பொருளாதார மேம்பாட்டிற்கு எப்போதும் உறுதியாக செயற்படும் இலங்கை வஙகி, தற்போதைய அரசாங்கத்தின் சுபீட்சத்தின் நோக்கு திட்டத்துடன் இணைந்து சிறு மற்றும் நடுத்தர அளவிலான கைத்தொழில்களை கட்டியெழுப்புவதற்காக ‘திவி உதான’ கடன் திட்டத்தையும், சேதனப் பசளை உற்பத்தியை ஊக்குவிப்பதற்கான ‘சஷ்ரிக’ கடன் திட்டத்தையும் செயற்படுத்தியுள்ளோம்.
இலங்கை வங்கியின் முதலாவது தலைவர் சேர் எர்னஸ்ட் த சில்வா அவர்களின் சொகுசு இல்லத்திலேயே பிரதமர் அலுவலகம் அமைந்துள்ளது. அதனால் இலங்கை வங்கியின் 82ஆவது ஆண்டு விழாவை அலரி மாளிகையில் கொண்டாடுவதற்கு கௌரவ பிரதமர் அனுமதி அளித்தமைக்கு நாம் நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம்.
2014ஆம் ஆண்டளவில் இலங்கையின் பொருளாதார வளர்ச்சி விகிதம் 6 சதவீதமாகக் காணப்பட்டது. அரச வங்கி வட்டி விகிதம் 8-9 சதவீதம் என்ற ஒற்றை இலக்கத்திலேயே காணப்பட்டது. சிறந்த பொருளாதார வளர்ச்சி காணப்பட்ட நாடொன்றையே கடந்த அரசாங்கம் பொறுப்பேற்றது. எனினும் 2019ஆம் ஆண்டளவில் வங்கி வட்டி வீதம் 15-16 சதவீதம் வரை அதிகரித்து 2014ஆம் ஆண்டில் ஒற்றை இலக்கத்தில் காணப்பட்ட வரி விகிதமும் 15 சதவீதமாக அதிகரித்தது.
இன்று ஆரம்பித்த விசேட ஏற்றுமதி பிரிவு நாட்டின் சிறு, நடுத்தர மற்றும் பாரியளவிலான ஏற்றுமதியாளர்களுக்கு நிதி மற்றும் நிதிசாரா அனைத்து வசதிகளையும் வழங்கி அரசாங்கத்தின் உள்ளூர் ஏற்றுமதியாளர்களை மேம்படுத்தும் செயற்பாட்டிற்கு இலங்கை வங்கி உறுதியாக விளங்கும் என காஞ்சன ரத்வத்த அவர்கள் தெரிவித்தார்.
இலங்கை வங்கியின் பொது முகாமையாளர் D.P.K.குணசேகர அவர்கள்
எமது கௌரவ பிரதமர் பிரதிநிதித்துவப்படுத்திய சமகி பெரமுன அரசாங்கத்திலேயே இலங்கை வங்கி கிராம மட்டத்திற்கு கொண்டுசெல்லப்பட்டது. அன்று மக்களுக்கு மக்கள் வங்கியுடன் இணைந்து செயற்படுவதற்கு வாய்ப்பு வழங்கப்பட்டது. அதன் பலனாக கிராமங்களில் உள்ளவர்களுக்கும் இலங்கை வங்கியுடன் இணைய வாய்ப்பு கிட்டியது. இன்று திறமையான மற்றும் படித்த 9000 ஊழியர்கள் இலங்கையில் வங்கியில் பணியாற்றுகின்றனர். கொவிட் தொற்று காலப்பகுதியிலும் இலங்கை வங்கி விசேட சேவைகள் பலவற்றை நிறைவேற்றியது.
நாடு முழுவதும் சென்று மீனவர்கள், தோட்ட தொழிலாளர், விவசாயிகள் உள்ளிட்ட வர்த்தகர்களை சந்தித்து இலங்கை வங்கியில் விரிவான வாய்ப்புகள் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டன. இதனால் இலங்கையில் அதிக வருமானம் ஈட்டிய வங்கியாக இலங்கை வங்கியை மாற்ற முடிந்தது. அதனாலேயே கடந்த ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில் வருமானத்தை 116 சதவீதத்தினால் அதிகரிக்க முடிந்தது. ‘சௌபாக்கியா’ கடன் திட்டத்தின் கீழ் அதிகமானோருக்கு கடன் வழங்கிய வங்கியாக இலங்கை வங்கி காணப்பட்டமையையும் இச்சந்தர்ப்பத்தில் நினைவுகூர வேண்டும் என குணசேகர அவர்கள் தெரிவித்தார்.
இந்நிகழ்வின் போது கடந்த காலத்தை பிரதிபலிக்கும் ஆவணப்படமொன்றும், 82ஆவது ஆண்டு விழா சின்னமும் வெளியிடப்பட்டது.
குறித்த நிகழ்வில் கௌரவ இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க, பிரதமரின் செயலாளர் திரு.காமினி செனரத், மத்திய வங்கியின் ஆளுநர் பேராசிரியர் W.D.லக்ஷ்மன், இலங்கை வங்கியின் தலைவர் காஞ்சன ரத்வத்த, பொது முகாமையாளர் D.P.K.குணசேகர உள்ளிட்ட இலங்கை வங்கியின் சிரேஷ்ட அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.