யாழ்ப்பாணம் – கிளிநொச்சி நீர் வழங்கல் திட்டத்தை கண்காணிக்கும் முகமாக அமைச்சர் நாமல் ராஜபக்ஷ தென்மராட்சி-நாவற்குழியில் அமைக்கப்படும் நீர் வழங்கல் அலுவலகத்திற்கு நேற்று பிற்பகல் விஜயம் மேற்கொண்டிருந்தார்.
நீர் வழங்கல் அமைச்சின் நிதி ஒதுக்கீட்டில் தேசிய
நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபையினரால் நடைமுறைப்படுத்தப்படும் குறித்த நீர் வழங்கல் திட்டம் ஊடாக பளை, கொடிகாமம், மீசாலை, பூநகரி, புத்தூர், நாவற்குழி, காரைநகர், வட்டுக்கோட்டை, கட்டுடை, புங்குடுதீவு மற்றும் நல்லூர் வலயம் ஆகிய பிரதேசங்களுக்கான நீர் விநியோக குழாய்களை வழங்கல் மற்றும் பதித்தல். யாழ் மாநகர சபை பகுதிக்கான நீர் வழங்கும் குழாய்களை வழங்கல் மற்றும் பதித்தல், வேலணை, கட்டுடை, நாவற்குழி, பொக்ககனை, பூநகரி மற்றும் கரவெட்டி பிரதேசங்களில் அலுவலகம், களஞ்சியம் மற்றும் விடுதிகளை கட்டுமானம் செய்தல் ஆகிய வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
நாவற்குழியில் அமைந்துள்ள நீர் வழங்கல் அலுவலக வளாகத்தில் அமைச்சர் மரக்கன்றை நாட்டி வைத்ததுடன், நீர்க் குழாய் ஒன்றினையும் பதித்து வேலைத்திட்டத்தை துரிதப்படுத்தி வைத்துள்ளார்.
குறித்த நிகழ்வில் மேலும் யாழ் மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுத்தலைவர் அங்கஜன் இராமநாதன், பாராளுமன்ற உறுப்பினர் சுரேன் ராகவன்,தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்துகொண்டிருந்தனர்.