தமிழீழ விடுதலைப் புலி அமைப்பிற்கு பலவந்தமான ஆள் சேர்ப்பில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டிருந்த யாழ்ப்பாணம் பல்கலைக்கழக நுண்கலைத்துறை விரிவுரையாளர் கண்ணதாசன் அனைத்து குற்றச்சாட்டுக்களிலும் இருந்து விடுவித்து விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
வவுனியா மேல் நீதிமன்றம் இன்று இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.
பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டிருந்த கண்ணதாசனுக்கு எதிராக, வவுனியா மேல் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருந்தது.
இதன்படி, 2017ம் ஆண்டு குற்றவாளியாக அடையாளம் காணப்பட்ட கண்ணதாசனுக்கு, வவுனியா மேல் நீதிமன்றம் ஆயுள் தண்டனையை வழங்கியுள்ளது.
இந்த தண்டனையை சவாலுக்கு உட்படுத்தி, ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன், மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த மனு மீதான விசாரணைகளின் போது, 2020ம் ஆண்டு ஜுலை மாதம் 22ம் திகதி, கண்ணதாசனுக்கு வழங்கப்பட்ட தண்டனையை, மேன்முறையீட்டு நீதிமன்றம் ரத்து செய்து, குற்றப் பத்திரிகையை மீள விசாரணைக்கு எடுத்துக்கொள்ள தீர்மானித்தது.
இதன்படி, குறித்த வழக்கு மீதான விசாரணைகள் வவுனியா மேல் நீதிமன்றத்தில் இன்று மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது.
இந்த வழக்கில் மேலதிக சாட்சியங்கள் எதுவும் இல்லைமையினால், வழக்கை நிறுத்திக்கொள்வதாக அரச சார்பில் நீதிமன்றில் அறிவிக்கப்பட்ட நிலையில், கண்ணதாசன் விடுவித்து விடுதலை செய்யப்பட்டுள்ளார்.