கொவிட் தடுப்பூசி அட்டை இல்லையெனில், பஸ்களில் நாளை முதல் இரண்டு மடங்கு கட்டணம்?
ஒரு மருந்தளவு கொவிட் தடுப்பூசியேனும் பெற்றுக்கொள்ளாதோர், பஸ்களில் பயணிக்கும் போது, சாதாரண பஸ் கட்டணத்தை விடவும் இரண்டு மடங்கான பஸ் கட்டணத்தை அறவிட வேண்டிய நிலைமை ஏற்படும் என இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் #கெமுணு #விஜேரத்ன தெரிவிக்கின்றார்.
மாகாணங்களுக்கு இடையிலான பஸ் சேவை நாளை (01) முதல் ஆரம்பிக்கப்படுகின்றமை குறித்து கருத்து வெளியிடும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
பஸ்களில் ஏறும் போது, கொவிட் தடுப்பூசி பெற்றமைக்கான அட்டையின் பிரதியையேனும், தம்வசம் வைத்துக்கொள்ளுமாறு அவர் பயணிகளிடம் கோரியுள்ளார்.
டெல்டா வைரஸ் பரவ ஆரம்பித்துள்ள நிலையில், சங்கம் என்ற விதத்தில் அதனை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரும் யோசனைகளை அரசாங்கத்திற்கு முன்வைப்பது தமது பொறுப்பு எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த விடயம் தொடர்பில் ஜனாதிபதி மற்றும் போக்குவரத்து அமைச்சர் ஆகியோருக்கு கடிதம் மூலம் தான் இன்று அறிவித்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
தூர பிரதேச பஸ் சேவைகளில் பயணிக்கும் #30வயதுக்கு மேற்பட்டோர், கொவிட் தடுப்பூசியை பெற்றுக்கொண்டமைக்கான அட்டையின் பிரதியை வைத்திருப்பது கட்டாயம் எனவும் கெமுணு விஜேரத்ன குறிப்பிட்டுள்ளார்.
கொவிட் தடுப்பூசி பெற்றுக்கொண்டமைக்கான அட்டை இருந்தால், மாத்திரமே பஸ்களில் பயணிப்பதற்கான அனுமதி வழங்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
அப்படியில்லையெனில், இரண்டு ஆசனங்களில் ஒருவர் பயணிக்க வேண்டும் எனவும், அதற்காக இரண்டு பயணிகளுக்கான கட்டணம் அறவிடப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதிசொகுசு பஸ்களில், ஆசனமொன்றிற்கு ஒரு பயணி மாத்திரம் என்ற அடிப்படையில் பயணிக்க முடியும் என கூறிய அவர், அதிசொகுசு பஸ்களில் பயணிப்போர் கட்டாயம் தடுப்பூசி பெற்றமைக்கான அட்டையை வைத்திருக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, நாளைய தினம் முதல் அனைத்து பஸ்களையும் சேவையில் ஈடுபடுத்த எதிர்பார்த்துள்ளதாக இலங்கை போக்குவரத்து சபை தலைவர் கிங்ஸிலி ரணவக்க தெரிவிக்கின்றார்.