பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியூதீனின் வீட்டில் பணிப் பெண்ணாக கடமையாற்றி வந்த நிலையில், தீ காயங்களுடன் மர்மமாக உயிரிழந்த ஹிஷாலினியின் பூதவுடன் இன்று (13) மீண்டும் உறவினர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது.
நீதிமன்ற உத்தரவிற்கு அமைய, ஹிஷாலினியின் சடலம் கடந்த 30ம் திகதி மீண்டும் தோண்டி எடுக்கப்பட்டு, பேராதனை போதனா வைத்தியசாலையில் இரண்டாவது பிரேத பரிசோதனை நடத்தப்பட்ட நிலையிலேயே, சடலம் மீண்டும் இன்று கையளிக்கப்பட்டுள்ளது.
ஹிஷாலினி, பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியூதீனின் வீட்டில் பணிப் பெண்ணாக கடமையாற்றி வந்த நிலையில், கடந்த மாதம் 3ம் திகதி தீ காயங்களுடன் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
இந்த நிலையில், ஹிஷாலினி சிகிச்சை பலனின்றி கடந்த மாதம் 15ம் திகதி உயிரிழந்திருந்தார்.
சடலம் மீதான முதலாவது பிரேத பரிசோதனை அறிக்கையில், ஹிஷாலினி தொடர் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
இவ்வாறான நிலையில், ரிஷாட் பதியூதீனின் மனைவி, மனைவியின் தந்தை மற்றும் இடைதரகர் ஆகியோர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தனர்.
எனினும், ஹிஷாலினியின் உயிரிழப்பில் சந்தேகம் உள்ளதாக தெரிவித்து, நீதிமன்ற உத்தரவிற்கு அமைய, சடலம் மீண்டும் தோண்டி எடுக்கப்பட்டு இரண்டாவது பிரேத பரிசோதனை நடத்தப்பட்டிருந்தது.
பிரேத பரிசோதனை அறிக்கை இதுவரை வெளிவராத நிலையில், நீதிமன்ற உத்தரவிற்கு அமைய சடலம் மீண்டும் உறவினர்களிடம் இன்று கையளிக்கப்பட்டது.
ஹிஷாலினியின் தாய் மற்றும் சகோதரன் ஆகியோர், பேராதனை வைத்தியசாலையில் வைத்து, சடலத்தை மீள பெற்றுக்கொண்டுள்ளனர்.
இவ்வாறு பெற்றுக்கொள்ளப்பட்ட ஹிஷாலினியின் சடலம், டயகம பொது மயானத்தில் அடக்கம் செய்யப்படவுள்ளது.
இதேவேளை, சடலம் மீதான இரண்டாவது பிரேத பரிசோதனை அறிக்கை விரைவில் நீதிமன்றத்திடம் கையளிக்கப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்