ஜனாதிபதி கோட்டாபய உட்பட அரசாங்கத்தை பதவி விலக கோரி நாளை 9 ஆம் திகதி மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைப்பெறவுள்ள நிலையில், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, ஜனாதிபதி மாளிகையில் இருந்து வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
நாளைய தினம் (9ஆம் திகதி) மக்கள் போராட்டத்தின் போது ஜனாதிபதி மாளிகையை முற்றுகையிட்டு ஜனாதிபதி மாளிகைக்கு முன்பாக தொடர்ச்சியான சத்தியாக்கிரகப் போராட்டத்தில் ஈடுபட போவதாக உளவுத்துறையினருக்கு கிடைத்த தகவலின் பேரிலேயே, பாதுகாப்பு உத்தியாக ஜனாதிபதி மாளிகையில் இருந்து ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடத்தில் தங்கவைக்கப்பட்டுள்ளதாக சிங்கள இணையத்தளம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
நாளைய போராட்டத்தில் பாதுகாப்பு கடமையில் பெருந்திரளான பொலிஸார் உட்பட இராணுவத்தினர் குவிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இதேநேரம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச வெளிநாடு செல்வதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டு வருவதாகவும் பல தகவல்கள் வெளியாகியுள்ளன.