கேகாலை மாவட்ட எட்டியாந்தோட்டை பிரதேசத்திற்குட்பட்ட கித்துள்கல நகர் மத்தியில் சிறு தேயிலை உற்பத்தியாளர்கள் இன்றைய தினம் உரத்தட்டுப்பாடு காரணமாகவும் நாட்டின் பொருட்களின் விலை உயர்வு காரணமாகவும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இவ் ஆர்ப்பாட்டத்தினை ஐக்கிய மக்கள் சக்தி எட்டியாந்தோட்டை பிரதேச சபை உறுப்பினர்கள் ஏற்பாடு செய்திருந்தனர் இதன்போது கேகாலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சுஜித் சஞ்சய் பெரேரா அவர்கள் கலந்து கொண்டிருந்தார்.
தேயிலை விவசாயிகள் இன்றைய காலகட்டத்தில் பெரும் இன்னலுக்கு முகம் கொடுத்துள்ளனர்.
உரத்தட்டுப்பாடு தொடர்பாக இலங்கை முழுவதும் பல ஆர்ப்பாட்டங்கள் மேற்கொண்டு தெரிவித்தபோதும் “செவிடன் காதில் சங்கு ஊதியதைப் போன்று” இருக்கின்றது எனவே இப்பிரச்சினையை கடவுளிடம் முறை இடுகிறோம் என்று ஆர்ப்பாட்டக்காரர்கள் தெரிவித்தனர்
மேலும் கேகாலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சுஜித் சஞ்சய பெரேரா கருத்து தெரிவிக்கையில் பெசில் ராஜபக்ஸ அல்ல அவரின் தந்தை வந்தாலும் நாட்டின் பொருளாதாரத்தை உயர்த்த முடியாது மக்களின் பிரச்சினைகளைத் தீர்க்க முடியாது தம்பி ஜனாதிபதியாகவும் அண்ணன் பிரதமராகவும் இருந்த போதிலும் நாட்டின் பிரச்சினையை தீர்க்க முடியாமல் பெசில் ராஜபக்ஷ வந்து எவ்வாறு பிரச்சினைகளை தீர்க்க போகின்றார் அண்ணன் தம்பி இருவருக்கும் முடியாத காரியத்தை பெசில் ராஜபக்ஷ அவர்கள் வந்து தீர்ப்பார் ஆனால் இவர்கள் இருவரும் தோல்வி தானே என்று கருத்து தெரிவித்தார்