யாழ். மாநகர முதல்வர் விஸ்வலிங்கம் மணிவண்ணன் அவர்களின் “தூய நகரம்” திட்டத்திற்கு அமைவாக தியாகி அறக்கொடை நிறுவனத்தின் வாமதேவன் தியாகேந்திரனின் நிதியுதவியுடன் புனரமைக்கப்பட்ட ஆரியகுளம் மகிழ்வூட்டும் திடல் திறந்து வைபவ ரீதியாக திறந்து வைக்கப்பட்டது
இன்று மாலை 5.30 மணிக்கு யாழ் மாநகர முதல்வரின் தலைமையில் இந்நிகழ்வு நடைபெற்றது.
இந்நிகழ்வின் பிரதம விருந்தினராக வடக்கு மாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜாவும்,சிறப்பு விருந்தினர்களாக தியாகந்திரன் அர்ச்சுனா மற்றும் நிலாஜினி தியாகேந்திரனும் கலந்து கொண்டதுடன் ,மதத்தலைவர்கள், அரசியல் பிரமுகர்கள், மாநகர சபை உறுப்பினர்கள், மாநகர சபை ஆணையாளர், மாநகர சபை உத்தியோகத்தர்கள், எனப்பலரும் கலந்துகொண்டனர்.
யாழ். நாக விகாரை விகாராதிபதி வணக்கத்துக்குரிய ஸ்ரீ விமல தேரர் பௌத்த கலாச்சார நடனக்குழுவினரின் வரவேற்புடன் நிகழ்வு மேடைக்கு வரவேற்கப்பட்டார். இவருடன் வடக்கு மாகாண ஆளுநரும் இணைந்திருந்தார்.
பின்னர் தவில் நாதஸ்வர இசையுடன் அழைத்து செல்லப்பட்டு ஆரியகுளத்தின் வரலாற்றை எடுத்துக்கூறும்வகையில் நினைவுக்கல் மூன்று மொழிகளிலும் திறந்து வைக்கப்பட்டதுடன் ஆரியகுளம் பெயர் பொறிக்கப்பட்ட எழுத்துரு திறக்கப்பட்டு,ஆரியகுளம் மகிழ்வூட்டும் திடல் திறந்து வைக்கப்பட்டது.
ஆரியகுளத்தை அழகுபடுத்தும் வேலைத்திட்டத்தை தன் செலவில் முன்னெடுத்த தியாகி அறக்கொடை நிறுவனத்தின் நம்பிக்கை பொறுப்பாளர் வாமதேவா தியாகேந்திரனுக்கு அறக்கொடை அரசன் எனும் நாமம் சூட்டி மாநகர சபையால் மதிப்பளிக்கப்பட்டதுடன் அத்துடன் பொறியலாளர்கள் வடிவமைப்பாளர்ளும் கௌரவிக்கப்பட்டனர்.
அத்துடன் இந்நிகழ்வில் நாதஸ்வர சக்கரவர்த்தி பஞ்சமூர்த்தி குமரன் அவர்களின் நாதஸ்வர கச்சேரியும் இடம்பெற்றது.
மின்விளக்கில் மிளிரும் ஆரியகுளத்தினை பலரும் வருகை தந்து பார்வையிட்டு சந்தோசத்துடன் புகைப்படங்களை எடுத்து வருகின்றனர்.