முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவை பிரதமராக்குவதற்கான முயற்சிகளை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன மேற்கொண்டு வருகின்றது.
கோட்டாபய ராஜபக்ஸவை பிரமராக்குவதற்கு பாராளுமன்றத்தில் பெரும்பான்மை தேவைப்படுவதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் பிரதீப் உந்துகொட தெரிவிக்கின்றார்.
முன்னாள் ஜனாதிபதி ஏதோ ஒரு வகையில் பாராளுமன்றத்திற்கு பிரவேசித்து, பாராளுமன்றத்தில் பெரும்பான்மையினரின் ஆதரவை வென்றெடுக்கும் பட்சத்தில், அவர் பிரதமராகுவார் என அவர் கூறுகின்றார்.
69 லட்சம் பேர் வாக்களித்து, ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்ட ஒருவர், பிரதமராக பதவியேற்பதற்கு தாம் எதிர்ப்பு கிடையாது என பாராளுமன்ற உறுப்பினர் பிரதீப் உந்துகொட தெரிவிக்கின்றார்.
எந்தவொரு ஊழல், மோசடிக்கும் தொடர்புப்படாத ஒருவரே கோட்டாபய ராஜபக்ஸ என அவர் கூறுகின்றார்.
அவ்வாறான ஒருவர், பிரதமராக பதவியேற்பது தவறு கிடையாது என பாராளுமன்ற உறுப்பினர் பிரதீப் உந்துகொட தெரிவிக்கின்றார்.
இதேவேளை, கோட்டாபய ராஜபக்ஸவை தேசிய பட்டியல் ஊடாக பாராளுமன்றத்திற்குள் கொண்டு வருவதற்கு அவரது சகாக்கள் முயற்சித்து வருவதாக ரஷ்யாவிற்கான முன்னாள் தூதுவர் உதயங்க வீரதுங்க தெரிவிக்கின்றார்.
தேசிய பட்டியல் ஊடாக கோட்டாபய ராஜபக்ஸவை பாராளுமன்றத்திற்குள் கொண்டு வருவதற்கும், பிரதமர் உள்ளிட்ட ஏதோ ஒரு பதவியை வழங்க சிலர் முயற்சித்து வருவதாகவும் அவர் கூறுகின்றார்.
எனினும், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவோ அல்லது அந்த கட்சியுடன் தொடர்புடையவர்களோ அதற்கு ஆதரவளிப்பார்கள் என்று தான் எதிர்பார்க்கவில்லை என உதயங்க வீரதுங்க தெரிவிக்கின்றார்