இலங்கையின் நீர் வழங்கல் நடவடிக்கையின் நிலைபேறான தன்மையை உறுதிப்படுத்தல் மற்றும் நாட்டு மக்கள் அனைவருக்கும் சுத்தமான குடிநீரை வழங்குவதை நோக்காகக் கொண்டு நீர் கட்டணத்தை அதிகரிப்பது தொடர்பில் நீர் வழங்கல் மற்றும் பெருந்தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழுவில் கலந்துரையாடப்பட்டது.
நீர் வழங்கல் மற்றும் பெருந்தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழு நீர் வழங்கல் மற்றும் பெருந்தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சர் ஜீவன் தொண்டமான்தலைமையில் பாராளுமன்றத்தில் கூடியபோதே இவ்விடயம் பற்றிக் கலந்துரையாடப்பட்டது.
தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபையினால் முகங்கொடுக்க நேர்ந்துள்ள முக்கியமான சவால்களுக்குரிய தீர்வுகளைப் பெற்றுக் கொள்வதற்காகவும், தரமான நீர் விநியோகத்தை உறுதிப்படுத்தும் நோக்கில் விரிவாகக் கலந்துரையாடப்பட்டே நீர்க்கட்டண அதிகரிப்புக்கு அமைச்சரவையில் அங்கீகாரம் வழங்கப்பட்டிருப்பதாக அமைச்சர் தெரிவித்தார்.
நீர் உற்பத்திக்கான செலவில் குறிப்பிடத்தக்களவு பங்களிப்புச் செய்யும் மின்சாரக் கட்டணம் அதிகரித்துள்ளமை உட்பட பல்வேறு விடயங்கள் இந்நீர் கட்டண அதிகரிப்புக்குக் காரணமாக அமைந்தது என்றும், இதனால் நீர் உற்பத்திக்கான செலவு அதிகரித்து மாதாந்தம் 500 மில்லியன் ரூபா நஷ்டம் ஏற்படுவதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
இதற்கு மேலதிகமாக கடன் சுமை, நாணயத் தேய்மானம், வட்டிவீதம் அதிகரித்துள்ளமை நீரை சுத்திகரிப்பதற்குத் தேவையான மூலப்பொருட்களின் விலை அதிகரித்தமை போன்றவையால் மாதாந்தம் சுமார் 2.8 பில்லியன் ரூபா இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டது.
சமுர்த்தி மற்றும் குடியிருப்பு நீர் பாவனையாளர்கள், குறைந்த சமூகப் பொருளாதாரப் பின்னணியுடன் கூடிய மக்களுக்களுக்கான நீர் கட்டணம் அதிகரிக்கப்படாது என்பதுடன், அவர்களுக்கான மானியங்களும் தொடர்ச்சியாக வழங்கப்படுவதால் மேலதிக பொருளாதார தாக்கம் ஏற்படாது.
அது மாத்திரமன்றி முன்மொழியப்பட்டுள்ள நீர் கட்டணத்தை அதிகரிக்குமிடத்து குறைந்தளவு நீரைப் பயன்படுத்தும் நீர் பாவனையாளர்கள், பாடசாலைகள், வைத்தியசாலைகள் மற்றும் மத வழிபாட்டுத்தளங்கள் போன்றவற்றுக்கு நிவாரணம் வழங்கும் ஏற்பாடுகள் உள்வாங்கப்பட்டுள்ளது.