பிரதமர் ரணில் விக்ரமசிங்க, சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல, அமைச்சர்கள், தொழிற்சங்கத் தலைவர்கள் மற்றும் அரச நிறுவனங்களின் தலைவர்கள் அடங்கிய குழுவினரிடையே இடம்பெற்ற கலந்துரையாடலின் போது முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்கு தெளிவுபடுத்தும் வகையில் தேசிய மருந்துகள் ஒழுங்குமுறை அதிகார சபை (NMRA ) அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
நாட்டில் நிலவும் மருந்துப் பற்றாக்குறைக்கு NMRA தான் காரணம் என்ற குற்றச்சாட்டுகளுக்கு பதிலளிக்கும் வகையில் இந்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
மருந்துப் பற்றாக்குறைக்கு அந்நியச் செலாவணி நெருக்கடியே முக்கிய காரணம் என்றும், இது அத்தியாவசியப் பொருட்களின் விநியோகத்தையும் பாதித்துள்ளது என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
அனைத்து விடயங்களும் அதிகார சபையின் எல்லைக்கு அப்பாற்பட்டவை என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மருந்துகளின் தரத்தை மதிப்பிட்டு நாட்டுககு வழங்கப்பட்ட மருந்து மற்றும் மருத்துவ உபகரணங்களை தாமதமின்றி வெளியிட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக NMRA தெரிவித்துள்ளது.
மருந்துகள் மற்றும் உபகரணங்களை வெளியிடுவதில் தாமதம் ஏற்பட்டதாக சுமத்தப்படும் குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மருந்துகள் மற்றும் மருத்துவ சாதனங்களின் உள்ளூர் உற்பத்தியாளர்கள் ஊக்கமளிக்க வில்லை என்ற குற்றச்சாட்டுகளையும் NMRA மறுத்துள்ளது.
இந்தத் திட்டத்தின் மூலம் உள்ளூர் உற்பத்தியாளர்களை ஊக்குவிப்பதற்காக தேசிய மருந்துகள் ஒழுங்குமுறை அதிகாரசபையில் தனிப் பிரிவு அமைக்கப்பட்டுள்ளது. கடந்த இரண்டு மாதங்களில் 150 வகையான மருந்துகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
நாட்டில் நிலவும் பிரச்சினையின் தன்மையைப் புரிந்து கொள்ளாமல் அதிகாரசபையை குற்றம் சாட்டுவது அல்லது வேண்டுமென்றே மறைப்பது தற்போதைய நெருக்கடியை மேலும் மோச மாக்கும் என அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.