லக்னோவைச் சேர்ந்த 16 வயது சிறுவன், மொபைல் கேம் விளையாடுவதைத் தடை செய்த தனது தாயைக் கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அத்தோடு நிற்காமல், அந்த 16 வயது மகன், தனது நண்பர்கள் இருவரை தனது வீட்டிற்கு அழைத்து வந்து, ஒன்லைனில் முட்டை கறியை ஓர்டர் செய்து அனைவரும் சேர்ந்து உண்டு விட்டு, “புக்ரே” என்ற திரைப்படத்தையும் பார்த்து இரசித்துள்ளனர். அவரது நண்பர்கள் அவரது தாயாரைப் பற்றி விசாரித்தபோது, அவர் தனது அத்தையின் வீட்டில் இருப்பதாக பொய் கூறியுள்ளான்.
குற்றம் சாட்டப்பட்ட சிறுவன் தன் குற்றத்தை ஒப்புக்கொண்டான்.
மேலதிக விசாரணையில் பொலிஸார் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
“தன்னை பப்ஜி போன்றதொரு மொபைல் கேம்-ஐ விளையாட அனுமதிக்காத, தன் தாயிடம் கோபமடைந்த அவன், ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவில் தன் தந்தையிடம் உள்ள உரிமம் பெற்ற துப்பாக்கியால் தாயாரை சுட்டுக் கொன்றதாக கூறினான்”.
அதனை தொடர்ந்து, அவனது தாயார் இறந்த பிறகு, அவர் உடலை ஒரு அறைக்குள் தள்ளிவிட்டு, தனது தங்கையை மற்றொரு அறையில் வைத்து பூட்டியுள்ளான். இரண்டு நாட்கள், அவன் தனது தாயின் சடலத்துடன் வீட்டில் தங்கியிருக்கிறான்.
பின்னர் துர்நற்றம் வீச தொடங்கியதால், ரூம் ஸ்பிரே அடித்துள்ளான். ஆனால், இதையும் மீறி, இறந்த உடலில் இருந்து துர்நாற்றம் வீசியதால், அக்கம் பக்கத்தினர் கண்டுபிடித்து பொலிஸாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
அந்த சிறுவன், தனது தாய் மற்றும் 10 வயது சகோதரியுடன் அவனுடைய வீட்டில் வசித்து வந்தான். அவனுடைய தந்தை ஒரு
இராணுவ அதிகாரி. அவர் வங்காளத்தில் பணியமர்த்தப்பட்ட நிலையில், அவருடைய உரிமம் பெற்ற துப்பாக்கி மட்டும் வீட்டில் வைத்துவிட்டுச் சென்றுள்ளார். இந்த நிலையில், இந்த கொடூர சம்பவம் அரங்கேறியுள்ளது.